இரண்டாவது இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் – தடுமாறும் இங்கிலாந்து!

Monday, September 9th, 2019

மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித், 2வது இன்னிங்சில் 82 ஓட்டங்கள் விளாசி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்து வருகிறது. அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 497 ஓட்டங்களும், இங்கிலாந்து 301 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய ஸ்மித் இந்த இன்னிங்சிலும் மிரட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 92 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேத்யூ வேட் 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அணித்தலைவர் டிம் பெய்ன் 23 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், பிராட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அவுஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ததன் மூலம், இங்கிலாந்துக்கு 383 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர் பர்ன்ஸ் மற்றும் அணித்தலைவர் ஜோ ரூட் இருவரும் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நேற்றைய 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 18 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டென்லி, ஜேசன் ராய் இருவரும் களத்தில் உள்ளனர். இன்னும் இங்கிலாந்தின் வெற்றிக்கு 365 ஓட்டங்கள் தேவை.