இன்று உலக இருபதுக்கு-20 பிரதான சுற்று ஆரம்பம்!

Tuesday, March 15th, 2016

இருபதுக்கு-20 போட்டிகளின் உலகக் கிண்ணம் என வர்ணிக்கப்படும் உலக இருபதுக்கு-20 தொடரின் பிரதான சுற்றாக அமைந்துள்ள சுப்பர் 10 சுற்று, இன்று இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் சுப்பர் 10 சுற்றுக்கு, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றிருந்த நிலையில், தகுதிகாண் போட்டிகள் மூலமாக பங்களாதேஷ் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் தகுதிபெற்றன.

இத்தொடரின் குழு 1 இல், இலங்கை, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் காணப்படுகின்றன. குழு 2 இல், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.

நடப்புச் சம்பியன்களாக இலங்கை அணி, அண்மைக்காலத் தோல்விகள் காரணமாகவும் அண்மைக்கால குழப்பங்கள் காரணமாகவும், இத்தொடரைக் கைப்பற்றுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்ட அணியாகக் கருதப்படவில்லை. மாறாக, போட்டிகளை நடத்தும் இந்திய அணி, தான் சந்தித்த இறுதி 12 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றிபெற்று, தனது சிறந்த போர்மை வெளிப்படுத்தியுள்ளதோடு, இப்போட்டிகள் இந்தியாவில் இடம்பெறுவதால், அவ்வணியின் வெற்றி வாய்ப்பு, இன்னமும் அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளும், பலமான அணிகளாகக் கருதப்படுகின்றன. எனினும், இந்தியாவில் வைத்து, சுழற்பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக அவுஸ்திரேலிய அணி, தென்னாபிரிக்காவில் வைத்துப் பெற்றுக் கொண்ட வெற்றி, அவ்வணிக்கு அதிக நம்பிக்கையை வழங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இன்று இடம்பெறவுள்ள இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி, நாக்பூரிலுள்ள விதர்பா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இப்போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரை வெல்லும் எதிர்பார்ப்பிலுள்ள இந்திய அணி, பிரென்டன் மக்கலத்தின் ஓய்வினால் ஓரளவு பலவீனமாகியுள்ளதாகக் கருதப்படும் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆனால், மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்ஸன், கொரே அன்டர்சன் போன்ற அதிரடி வீரர்கள், அவ்வணிக்குப் பலம் வழங்குகின்ற நிலையில், இப்போட்டி விறுவிறுப்பானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது

Related posts: