இன்று ஆரம்பிக்கிறது முதலாவது டெஸ்ட்: 500ஆவது டெஸ்டில் இந்தியா!

Thursday, September 22nd, 2016

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரின் முதலாவது போட்டி, இன்று ஆரம்பிக்கவுள்ளது. கான்பூரில் இடம்பெறவுள்ள இப்போட்டி, காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

உலகின் இரண்டாம் நிலை டெஸ்ட் அணியான இந்தியாவும் 7ஆம் நிலை டெஸ்ட் அணியான நியூசிலாந்தும் மோதும் இத்தொடர், இந்தியாவுக்கு சார்பாகவே அமையுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அதையும் தாண்டி, முக்கியமானதொரு மைல்கல்லை, இந்தியாவுக்கு வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையிலும் 499 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள இந்திய அணி, இப்போட்டியில் விளையாடுவதன் மூலமாக, தனது 500ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதன்மூலமாக, இந்த மைல்கல்லை அடைந்த 4ஆவது அணி என்ற பெருமையை, அவ்வணி பெறவுள்ளது. அதிக போட்டிகளில் இங்கிலாந்து (976) அணி விளையாடியுள்ள அதேநேரத்தில், அவுஸ்திரேலியா (791), மேற்கிந்தியத் தீவுகள் (517) ஆகிய அணிகள், இந்தியாவை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அணிகளாகும்.

1932ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்ற இந்திய அணி, 84ஆண்டுகளிலேயே 499 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

இந்த மைல்கல்லைத் தாண்டி, முக்கியமானதொரு தொடராகவும் இது அமையவுள்ளது. விராத் கோலியின் தலைமையில், இந்தியாவில் இந்திய அணி விளையாடும் இரண்டாவது தொடர் இதுவாகும். ஆகவே, சொந்த நாட்டில் வைத்து வெள்ளையடிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்குகிறது.

இந்தியாவில் வைத்து இரவிச்சந்திரன் அஷ்வினும் இரவீந்திர ஜடேஜாவும் மிகச்சிறந்த பந்துவீச்சுச் சராசரிகளைக் கொண்டிருப்பதோடு, எதிரணிகளுக்கு மாபெரும் சவாலாக உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக, அமித் மிஷ்ராவும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர்களின் சுழற்பந்து வீச்சை நியூசிலாந்து எதிர்கொள்ளும் விதத்திலேயே, தொடரின் முடிவு அமையவுள்ளது.

இந்திய அணி, வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர் குமாருடன் மாத்திரம் களமிறங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி: முரளி விஜய், லோகேஷ் ராகுல், செற்றேஸ்வர் புஜாரா, விராத் கோலி, அஜின்கியா ரஹானே, றோகித் ஷர்மா, இரவிச்சந்திரன்அஷ்வின், ரிதிமான் சஹா, இரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அமித் மிஷ்ரா.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, அவ்வணியின் தலைவர் கேன் வில்லியம்ஸனே முக்கியமான வீரராக உள்ளார். சுழற்பந்து வீச்சைச் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய அவரோடு, சிரேஷ்ட வீரரான றொஸ் டெய்லரும், அவ்வணிக்கு முக்கியமான வீரராக அமையவுள்ளார்.

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி: டொம் லேதம், லூக் றொங்கி, கேன் வில்லியம்ஸன், றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொலஸ், பி.ஜே வற்லிங், மிற்சல் சான்ட்னெர், மார்க் கிறெய்க், இஷ் சோதி, நீல் வக்னர்.

colindian-team150912150_4749471_12092016_mpp_cmy

Related posts: