இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளராக குட்டப்பா!

Thursday, December 27th, 2018

இந்திய ஆடவர் குத்துச்சண்டை அணிக்கான பயிற்சியாளராக, துரோணாச்சார்யா விருது வென்ற சி.ஏ. குட்டப்பா (39) பொறுப்பேற்றுள்ளார்.

அந்தப் பொறுப்பிலிருந்த எஸ்.ஆர். சிங் ஓய்வுபெற்றதை அடுத்து, கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய தேசிய பயிற்சி முகாமில் குட்டப்பா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விஜேந்தர் சிங், சுரன்ஜோய் சிங், சிவ தாபா போன்ற வெற்றிகரமான வீரர்களை உருவாக்கியதில் குட்டப்பாவுக்கு பங்குள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பொறுப்பு குறித்து குட்டப்பா தெரிவிக்கையில் இது மிகப்பெரிய பொறுப்பாகும். அதில் முடிந்த வரையில் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பேன். குத்துச்சண்டை வீரர்களை மேம்படுத்த சில திட்டங்கள் வைத்துள்ளேன். அதை முறையாகச் செயல்படுத்த இயலும் என்று நம்புகிறேன்.

இந்தப் பொறுப்புக்கு வர எனக்கு உத்வேகம் அளித்தவர், உயர் செயல்பாட்டு இயக்குநர் சான்டியாகோ நீவா தான். வயது குறைந்த நபராக இருப்பதால் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க நான் தயங்கியபோது, அவர்தான் தகுந்த ஆலோசனை வழங்கினார் என்று குட்டப்பா கூறினார்.

பயிற்சியாளர் பொறுப்பேற்றுள்ள குட்டப்பாவுக்கான முதல் பெரிய பரீட்சையாக, வரும் ஜனவரி மாதம் குவாஹாட்டியில் இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டி நடைபெறவுள்ளது.

Related posts: