இந்திய கிரிக்கெட் அணிக்குள்  மோதல் !

Thursday, June 22nd, 2017

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்குப் பிடிக்காததால், தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனக்குமுறல்களை வெளியிட்டு, அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே இதுபற்றிய ஊகங்கள் உலா வந்த நிலையில், தற்போது உறுதியாகியிருக்கிறது. கிரிக்கெட் வாரிய நிர்வாகம் தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக தான் கெளரவமடைந்ததாகவும், கடந்த ஓராண்டில் அடைந்த சாதனைகளுக்கு அணியின் கேப்டன், வீரர்கள், பயிற்சி மற்றும் துணை ஊழியர்களுக்கே எல்லா பெருமைகளும் சென்றடையும் என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் கும்ப்ளே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எனது செயற்பாடு கேப்டனுக்குப் பிடிக்கவில்லை என்றும், நான் தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பதை அவர் விரும்பவில்லை என்றும் முதல் முறையாக பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்) நிர்வாகத்தின் சார்பில் நேற்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் உள்ள எல்லை வரையறை குறித்து நான் எப்போதும் மதிப்பவன் என்பதால் அதைக் கேட்டதும் நான் ஆச்சரியமடைந்தேன்” என கும்ப்ளே தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

“கேப்டனுக்கும் எனக்கும் இடையிலான குழப்பத்தைத் தீர்த்து வைக்க பிசிசிஐ நிர்வாகம் முயற்சி செய்தாலும் கூட, அது மீண்டும் சேர முடியாத அளவுக்குப் போய்விட்டது. அதனால், விலகிச் செல்வதே நல்லது என நான் நம்புகிறேன்” என்று கும்ப்ளே தனது முடிவை அறிவித்திருக்கிறார். “தொழில்முறை, கட்டுப்பாடு, ஈடுபாடு, நேர்மை, கூடுதல் திறன், பரந்துபட்ட கருத்துக்கள் ஆகியவற்றை நான் பயிற்சியாளனாக அணிக்குக் கொண்டுவந்தேன். இணைந்து செயல்பட வேண்டுமானால், இந்த முயற்சிகள் மதிக்கப்பட வேண்டும் ” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்தக் கருத் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கிரிக்கெட் வாரியம் விரும்பும் நபரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதே சரியானது என்று நான் நம்புகிறேன்” என கும்ப்ளே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். கிரிக்கெட்டுக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வழங்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ள கும்ப்ளே, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்துக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த முடிவு குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் மோதல் ஏற்படும்போது, கேப்டனின் கைதான் ஓங்கும் என்பது தவிர்க்க முடியாதது என்று கூறப்படும் நிலையில், கும்ப்ளேவுக்கு பெரிய பொறுப்பு வழங்கப்படாவிட்டால் தான் ஏமாற்றமடைவேன் என தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்து இரண்டு நாட்களில் இந்திய அணியில் நடக்கும் உச்சகட்ட மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Related posts: