இந்தியா–பாகிஸ்தான் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்
Friday, March 11th, 201620 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தர்மசாலாவில் வருகிற 19ஆம் திகதி நடைபெற இருந்த இந்தியா–பாகிஸ்தான் ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்றில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இமாச்சலபிரதேசத்தில் உள்ள மலை வாசஸ்தலமான தர்மசாலாவில் வருகிற 19ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை தர்மசாலாவில் நடத்தக்கூடாது என்று முன்னாள் ராணுவ வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவிடம் தர்மசாலா மைதானம் அருகில் உள்ளது. எனவே பாகிஸ்தான் அணியை இங்கு விளையாட அனுமதிப்பது ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் மனதை புண்படுத்தும் செயலாகும். இதனால் இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தனர். முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தர்மசாலாவில் பாகிஸ்தான் அணி மோதும் ஆட்டம் நடத்தப்பட்டால் அதற்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று இமாச்சலபிரதேச முதல்லமைச்சர் விர்பத்ரசிங் வெளிப்படையாக அறிவித்ததால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இமாச்சலபிரதேச அரசை சரிகட்டி போட்டியை தர்மசாலாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதன்பலனாக இந்த போட்டிக்கு மத்திய, மாநில அரசுகள் முழு பாதுகாப்பு அளிக்க உத்தரவாதம் அளித்தன.
பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று இமாச்சலபிரதேச அரசு அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு பிரச்சினை எதுவும் உள்ளதா? என்பதை நேரில் ஆய்வு செய்ய 2 பேர் கொண்ட பாகிஸ்தான் குழு இந்தியா வந்து போட்டி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து தனது அறிக்கையை பாகிஸ்தான் அரசிடம் தாக்கல் செய்தது.
இதற்கிடையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக இந்தியா புறப்பட தயாராக இருந்த பாகிஸ்தான் அணி தங்கள் நாட்டு அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடைசி நேரத்தில் தனது பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் தர்மசாலாவில் நடத்த (மார்ச் 19–ந் தேதி) திட்டமிடப்பட்டு இருந்த இந்தியா–பாகிஸ்தான் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெறுமா? என்று நிலவி வந்த சர்ச்சைக்கு சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் நேற்று முற்றுப்புள்ளி வைத்தது. அதாவது வருகிற 19–ந் தேதி தர்மசாலாவில் நடக்க இருந்த இந்தியா–பாகிஸ்தான் லீக் ஆட்டத்தை கொல்கதாவுக்கு மாற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்தியா–பாகிஸ்தான் லீக் ஆட்டம் தர்மசாலாவில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி ஏற்கனவே அறிவித்த அதே நாளில், குறிப்பிட்ட நேரத்தில் (மார்ச் 19–ந் தேதி, இரவு 7.30 மணி) நடைபெறும். மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக இமாச்சலபிரதேச முதல்–மந்திரி தெரிவித்த கருத்தை தொடர்ந்து இந்த கடினமான முடிவு மேற்கொள்ளப்பட்டது. எல்லாவற்றையும் விட வீரர்களின் பாதுகாப்பு முதன்மையானது என்பதால் இந்த கடைசி கட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எங்களது இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்.
இந்த ஆட்டத்தை மாற்றி இருப்பதால் இந்தியா மீது நம்பிக்கை இழந்து விட்டோம் என்பது அர்த்தமல்ல. பாதுகாப்பு காரணத்துக்கான போட்டியை கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்வது இது முதல்முறையல்ல. ஆனால் மாநில அரசு தங்களது கவலையை முன்கூட்டியே தெரிவித்து இருக்க வேண்டும். இந்த போட்டிக்கான டிக்கெட் வாங்கியவர்கள் விரும்பினால் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அல்லது இந்த டிக்கெட்டை கொல்கத்தா போட்டியை பார்க்கும் வகையில் மாற்றி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் அணியின் ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டு இருப்பதை வரவேற்று இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது அணி இந்தியாவுக்கு வருவது குறித்து அறிவிக்காமல், நிபந்தனை விதித்து இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணியின் வருகை குறித்து நிலையற்ற தன்மையே தொடருகிறது.
போட்டி இடமாற்றம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார்கான் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இந்தியாவுக்கு புறப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நான் பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். அத்துடன் நல்ல இடமான கொல்கத்தாவுக்கு போட்டி மாற்றப்பட்டு இருப்பது பாராட்டுக்குரிய விஷயம் என்பதையும் தெரிவித்து இருக்கிறேன். ஆனால் இந்திய அரசு சார்பில் எங்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்பதற்கு உறுதி அளிக்க வேண்டும். இதற்காக நாங்கள் காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை’ என்றார்.
‘இமாச்சலபிரதேச அரசின் செயல்பாடு மாநிலத்துக்கும், நாட்டுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். இந்த செயல் நமது நாட்டின் மீதான மதிப்பை குலைப்பதாகும்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், இமாச்சலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவுக்கு போட்டி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|