இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் கோலகலமாக ஆரம்பம்!

Saturday, April 7th, 2018

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு 11 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் 20க்கு 20 தொடர் ஆரம்பமாகிறது.

இன்றைய போட்டி மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கின்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்தியன் ப்ரிமியர் லீக் 20க்கு 20 போட்டிகளில் இதுவரை 10 தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 3முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா 2 முறைகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் கிண்ணம் வென்றுள்ளன.

சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லிடேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாட உள்ளன.

இன்று ஆரம்பமாகும் லீக் ஆட்டங்கள் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஓப்சுற்றுக்கு தகுதி பெறும்.

மே மாதம் 22 ஆம் திகதி முதலாவது தகுதிகான் ஆட்டமும், 23 ஆம் திகதி வெளியேறும் அணிக்கான ஆட்டமும், 25ஆம் திகதி இரண்டாவது தகுதிகான் போட்டியும் 27 ஆம் திகதி இறுதிப் போட்டியும்இடம்பெற உள்ளது.

இன்று இடம்பெற உள்ள முதலாவது போட்டியில் இரு அணிகளும் பலம் பொருந்தியது என்பதால் ஆரம்ப ஆட்டமே சிறப்பானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts: