இந்தியத் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்!

Tuesday, May 21st, 2019

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரும், அனுபவமிக்க வீரருமான தினேஷ் சந்திமால் இந்திய ஏ அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து தன்னை விடுவிக்கும்படி தேர்வுக் குழு உறுப்பினரும், இலங்கை ஏ அணியின் முகாமையாளருமான சமிந்த மெண்டிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ஆணைய தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இலங்கை ஏ அணியின் முகாமையாளர் சமிந்த மெண்டிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் சமிந்த மெண்டிஸ் கூறியதாவது, இந்திய ஏ அணியுடனான சுற்றுப்பயணத்தில் விளையாடுவது குறித்து நாம் சந்திமாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அப்போது அவர் இங்கிலாந்தின் கவுண்டி அணியயொன்றுக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், எனவே, தன்னை இலங்கை ஏ அணியில் இருந்து விடுவிக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே மூன்று மாதங்கள் கவுண்டி அணிக்காக விளையாடுவது சந்திமாலுக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என கருதி அவருக்கு அதில் பங்கேற்பதற்கான அனுமதியை நாங்கள் கொடுத்தோம். இதனால் அவரை இலங்கை ஏ அணியில் இணைத்துக் கொள்ளவில்லை. எனினும், அவர் எந்த அணிக்காக விளையாடப் போகின்றார் என்பது பற்றி எமக்கு அறிவிக்கவில்லை என சமிந்த மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடுவது தொடர்பில் தினேஷ் சந்திமால் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று குழுவிடம் இதுவரை அனுமதி கேட்கவில்லை எனவும், பொதுவாக அவ்வாறு வெளிநாட்டு அணியொன்றுக்காக விளையாடுவதாக இருந்தால் முதலில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரிக்கு கடிதம் மூலம் அறிவிக்க வேண்டும் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை கிரிக்கெட் ஆணையத்தில் துணைத் தலைவர் ரவீன் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: