இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

Tuesday, July 18th, 2017

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், தென்னாபிரிக்க அணி, இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

ட்ரென்ட் பிரிட்ஜில் இடம்பெற்ற இப்போட்டியின் 4ஆவது நாளான நேற்றே, போட்டி நிறைவடைந்தது.

474 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, விக்கெட் எதனையும் இழக்காது ஓர் ஓட்டத்துடன், நேற்றைய நாளை ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே முதலாவது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், 3 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, போராட்டத்தை வெளிப்படுத்துமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 4ஆவது விக்கெட்டாக அலஸ்டெயர் குக் வீழ்த்தப்பட்ட பின்னர், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 133 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 340 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. அவ்வணியின் இறுதி 5 விக்கெட்டுகளும், 11 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

துடுப்பாட்டத்தில் அலஸ்டெயர் குக் 42, மொய்ன் அலி 27 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் கேஷவ் மஹராஜ், வேர்ணன் ஃபிலாந்தர் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், டுவன்னே ஒலிவியர், கிறிஸ் மொறிஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதல் இனிங்ஸில், தென்னாபிரிக்க அணி, 335 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி பதிலளித்து 205 ஓட்டங்களைப் பெற, தென்னாபிரிக்க அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 343 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் நாயகனாக, வேர்ணன் ஃபிலாந்தர் தெரிவானார்.இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், தற்போது தென்னாபிரிக்க அணி வென்றுள்ள நிலையில், தொடர் நிலை, 1-1 என்ற நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: