இங்கிலாந்து வெற்றி!

Tuesday, August 9th, 2016

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் எட்ஜ்பஸ்டனில் இடம்பெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை 141 ஓட்டங்களினால் வென்ற இங்கிலாந்து, நான்கு போட்டிகள் கொண்ட தொடரில், 2-1 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, கரி பலன்ஸின் 70, மொயின் அலியின் 63 ஓட்டங்கள் துணையோடு, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், சொஹைல் கான் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, அஸார் அலியின் 139, சமி அஸ்லாமின் 82 ஓட்டங்களின் துணையோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 400 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஸ்டூவர்ட் ப்ரோட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆறு விக்கெட்டுகளை இழந்து 445 ஓட்டங்களைப் பெற்று, பாகிஸ்தான் அணிக்கு 343 ஓட்டங்களை வெற்றி இலக்காக வழங்கி ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மொயின் அலி ஆட்டமிழக்காமல் 86, ஜொனி பெயார்ஸ்டோ 83 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹம்மட் ஆமிர், சொஹைல் கான், யசீர் ஷா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சமி அஸ்லாம் 70 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஸ்டூவர்ட் ப்ரோட், ஸ்டீவன் ஃபின், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டினைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக மொயின் அலி தெரிவானார்

Related posts: