இங்கிலாந்து வெற்றி!

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், சௌதாம்டனின் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலகுவாக இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் அஸார் அலி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அஸார் அலி 82, சர்டஃபாஸ் அஹமட் 55, பாபர் அஸாம் 40 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடில் ரஷீட் இரண்டு, கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், மார்க் வூட், ஜோ ரூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு இங்கிலாந்து துடுப்பெடுத்தாடியபோது இரண்டு தடவைகள் மழை குறுக்கிட்டிருந்ததுடன், இரண்டாவது தடவை மழை குறுக்கிட்டதுடன் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அப்போது 34.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை 194 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றிருந்தது. டக் வேர்த் லூயிஸ் முறைப்படி, 34.3 ஓவர்களில் 151 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில், 44 ஓட்டங்களால் டக் வேர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜேஸன் ரோய் 65, ஜோ ரூட் 61, அணித்தலைவர் ஒயின் மோர்கன் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் உமர் குல், மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஜேஸன் ரோய் தெரிவானார்.
Related posts:
|
|