இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லருக்கு வந்த சோதனை!
Wednesday, April 13th, 2016இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் டெய்லர் தீவிர இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதேயான ஜேம்ஸ் டெய்லருக்கு கடந்த வாரம் உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவர் தீவிரமான இருதய நோயால்[ARVC (Arrhythmogenic Right Ventricular Arrhythmia)] பாதிக்கப்படிருப்பது தெரியவந்துள்ளது.
7 டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 2012ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கடந்த வருடம் நடந்த டெஸ்ட் போட்டிகளில் கூட இடம்பெற்றிருந்தார்.
27 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள டெய்லர் கடந்த வருடம் அயர்லாந்து சுற்றுப்பயணம் சென்ற இங்கிலாந்து அணிக்கு தலைவராக செயல்பட்டார்.
இந்நிலையில் தற்போது தீவிரமான இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெய்லர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
ஜேம்ஸ் டெய்லரின் இந்த நிலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி ஜேம்ஸ் டெய்லர் கூறுகையில், “இது எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான வாரமாக இருந்தது. எனது உலகம் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் அதில் போராட தயாராக இருக்கிறேன் “என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குனர் ஆன்ரூ ஸ்ட்ராஸ் கூறுகையில், “எதிர்பாராத விதமாக ஜேம்ஸ் டெய்லரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. கிரிக்கெட் வாரியம் அவருக்கு உதவ தயாராக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|