இங்கிலாந்தின் சுழலில் சிக்கி வீழ்ந்த இலங்கை!

Monday, October 29th, 2018

கொழும்பில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், இலங்கை அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 போட்டி, இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பட்லர், ஹால்ஸ், மோர்கன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், தொடக்க வீரரான ஜேசன் ராய் அதிரடியாக 36 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் விளாசினார். அடுத்து வந்த மோயீன் அலி அதிரடியாக 27 ஓட்டங்களும், ஸ்டோக்ஸ் 26 ஓட்டங்களும் எடுக்க இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

அதன் பின்னர் இலங்கை அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா(3) மற்றும் குசால் மெண்டிஸ்(1) ஆகியோர் ஏமாற்றினர். பின்னர் களமிறங்கிய சண்டிமல் 26 ஓட்டங்களும், சில்வா 17 மற்றும் கமிந்து மெண்டிஸ் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும், அதற்கு அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். டென்லியின் அபார சுழலில், தனியாளாய் போராடிய திசாரா பெரேரா 57 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் 20வது ஓவரின் கடைசி பந்தில் மலிங்கா அவுட் ஆக, இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் டென்லி 4 விக்கெட்டுகளும், ரஷித் 3 விக்கெட்டுகளும், ஜோர்டன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Related posts: