ஆஸி மண்ணில் வீழ்ந்தது இந்தியா!

Saturday, November 28th, 2020

இந்தியா அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 66 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 114 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 105 ஓட்டங்களையும், கிளென் மேக்ஸ்வெல் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும், பும்ரா, நவ்தீப் சைனி மற்றும் யுஸ்வேந்தி சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 375 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணியால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 66 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது, அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்திக் பாண்ட்யா 90 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 74 ஓட்டங்களையும் நவ்தீப் சைனி ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 4 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹெசில்வுட் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 66 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் இதே சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related posts: