ஆஸிக்கு அதிர்ச்சியளித்தது மேற்கிந்தியதீவுகள்!

Thursday, June 16th, 2016

மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிர்ச்சி வெற்றிபெற்றது.

சென். கிற்ஸில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது ஓட்டத்துக்கே முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி சார்பாக, இரண்டாவது விக்கெட்டுக்காக 170 ஓட்டங்கள் பகிரப்பட்டன. ஆனால், பின்வரிசை வீரர்களால் அதிரடியான ஆட்டத்தை வழங்க முடியாது போனது.

துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா 98 (123), ஸ்டீவன் ஸ்மித் 74 (95), ஜோர்ஜ் பெய்லி 55 (56) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டர், கிறெய்க் பிறெத்வெய்ட், கெரான் பொலார்ட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

266 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 45.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, சீரான இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டதால், அவ்வணி வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் மார்லன் சாமுவேல்ஸ் 92 (116), ஜோன்சன் சார்ள்ஸ் 48 (38), டெரன் பிராவோ 39 (63), டினேஷ் ராம்டின் 29 (38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அடம் ஸாம்பா, நேதன் கூல்ட்டர்நைல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானார்.

Related posts: