ஆவேசமான முன்னாள் அணித்தலைவர் கிளார்க்!

Monday, March 26th, 2018

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் கிளார்க், பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், கேப்டவுனில் நடந்து வரும் இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில், அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது சர்ச்சைக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்ட பேன்கிராப்ட், அணியில் உள்ள முக்கிய வீரர்கள் சிலர் திட்டமிட்டே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும் இது தமக்கு தெரிந்தே நடந்த தவறு தான் என்றும், இது போல் இனி நடக்காது என்றும் கூறினார்.

இந்த விடயத்துக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘இது திட்டமிடப்பட்ட ஏமாற்று வேலை. இது அவமானம், யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. உலகிலேயே சிறந்த பந்துவீச்சை கொண்ட அணி அவுஸ்திரேலியா.

அப்படி இருக்கும் போது, இப்படி ஏமாற்றி வெற்றிப்பெற முயன்றிருக்கக் கூடாது. நான் அவுஸ்திரேலியாவின் தனிப்பட்ட வீரர் பற்றியோ, தலைவர் பற்றியோ கருத்துக் கூற விரும்பவில்லை.

அணித்தலைவர் பொறுப்பில் இருந்து ஸ்மித் விலக வேண்டுமா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், அந்த டிவி காட்சியைப் பார்த்ததும் emotion ஆகி விட்டேன். இப்படி செயல்படுவது ஒரு தலைமைக்கு சரியானதல்ல’ என தெரிவித்துள்ளார்.

Related posts: