ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

Wednesday, April 6th, 2016

சர்வதேச கிரிக்கெட் வாரியம் அணிகள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் டி20 தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முடிவின் அடிப்படையில் அரையிறுதியில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி (126 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது.

சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி (125 புள்ளிகள்) 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து (120 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்திலும், 2வது இடம் பிடித்த இங்கிலாந்து அணி (115 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4வது இடத்தை பிடித்திருக்கிறது.

அதேசமயம் லீக் சுற்றோடு வெளியேறிய தென்ஆப்பிரிக்க அணி (115 புள்ளிகள்) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் துணை தலைவர் விராட் கோஹ்லி (889 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.

அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் (803 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் (754 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (750 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர் பாப் டு பிளிஸ்சிஸ் (741 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் சாமுவேல் பத்ரீ (790 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார்.

தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தார் (740 புள்ளிகள்), இந்திய வீரர் அஸ்வின் (712 புள்ளிகள்), பாகிஸ்தான் வீரர் அப்ரிடி (674 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர் கைல் அப்போட் (671 புள்ளிகள்) முறையே 2 முதல் 5 இடங்கள் பிடித்துள்ளனர்.

அதேசமயம் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 7வது இடத்துக்கும், ரவீந்திர ஜடேஜா 10வது இடத்துக்கும், நெஹ்ரா 11வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

Related posts: