ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

Monday, September 3rd, 2018

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன.

இதில் 58 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

பதக்கப் பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. ஜப்பான் (75 தங்கம், 56 வெள்ளி, 74 வெண்கலம், மொத்தம் 205) 2-ஆம் இடத்தையும், தென் கொரியா (49 தங்கம், 58 வெள்ளி, 70 வெண்கலம், மொத்தம் 177) 3-ஆம் இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம், 24 வெள்ளி, 43 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது.

பதக்கப்பட்டியலில் சிரியா ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன் கடைசி இடத்தை (37) பிடித்தது.

இந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் பட்டியலில் 8-ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 24 வெள்ளிப் பதக்கங்கள் வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் ஜகார்த்தாவில் உள்ள கெலோரா பங் கர்னோ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிறைவு நிகழ்ச்சியை நேரில் காண பல்லாயிரம் பேர் நேரில் திரண்டிருந்தனர். நிறைவு நிகழ்ச்சியில் சித்தார்த் ஸ்லாதியா, தேனதா சங் ஆகியோர் பாலிவுட் பாடல்களும் பாடினர்.தொடர்ந்து, நடனம், வாணவேடிக்கை என கொண்டாட்டங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைந்தது.

முன்னதாக, இந்த ஆசிய விளையாட்டைப் பொருத்த வரையில் இந்தியாவில் இந்த முறையும் தடகள வீரர், வீராங்கனைகளே அதிக பதக்க வேட்டையில் ஈடுபட்டனர். 15 தங்கப் பதக்கங்களில், 7 பதக்கங்கள் தடகள விளையாட்டுகள் மூலம் கிடைத்தவையாகும். முதல் தங்கப் பதக்கத்தை குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால் சிங் தூர் 20.75 மீ தூரம் எறிந்து சாதனையுடன் கைப்பற்றினார்.

அடுத்ததாக, ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹெப்டத்லானில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்வப்னா பர்மன் தட்டிச் சென்றார். டூட்டி சந்த், 100 ஓட்டம் உள்பட்ட இரு போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்ற, ஹிமா தாஸ் 200 மீட்டரில் வெள்ளி வென்றார்.

நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தனதாக்கினார். ஆடவருக்கான ஓட்டப் பந்தயத்தில் மஞ்ஜித் சிங், ஜின்சன் ஜான்சன் இந்தியாவின் தங்கமகன்கள் ஆகினர். தடகளத்தை தொடர்ந்து பாட்மிண்டனில் சிந்து வெள்ளியும், சாய்னா வெண்கலமும் கைப்பற்றினர்.

டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. துப்பாக்கி சுடுதலில் 16 வயது இளம் வீரர் செளரவ் செளதரி, ராணி சர்னோபத் தங்கம் வென்று சாதனை படைக்க, ஷர்துல் வெள்ளியை தனதாக்கினார். மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் தங்கம் தட்டிச் செல்ல, சீனியர்களான சுஷில் குமார், சாக்ஷி மாலிக் ஏமாற்றமளித்தனர்.

ஹாக்கி மற்றும் கபடியில், மகளிருக்கு வெள்ளியும், ஆடவருக்கு வெண்கலமும் கிடைத்தன. பிரிட்ஜ் என்ற பெயரில் முதல் முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்ட சீட்டாட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இந்தியாவுக்கான கடைசி தங்கத்தை அமித் பங்கால் குத்துச்சண்டையில் பெற்றுத் தந்தார்.

Related posts: