அஸாம் கன்னிச் சதம்: இலகுவாக வென்றது பாகிஸ்தான்!

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், சார்ஜாவில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், பாகிஸ்தான் இலகுவாக வெற்றியீட்டியது.
ஒளிக் கோபுரப் பிரச்சினையால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில், பாகிஸ்தான் அணி, 49 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பாபர் அஸாம், தனது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி சதத்தினைப் பூர்த்தி செய்து 120, ஷர்ஜீல் கான் 54 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிறேய்க் பிறாத்வெயிட் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
டக் வேர்த் லூயிஸ் முறைப்படி, 49 ஓவர்களில், 287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 111 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், மார்லன் சாமுவேல்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் நான்கு, ஹசன் அலி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக பாபர் அஸாம் தெரிவானார்.
இப்போட்டியில் வென்றதன் மூலம், இந்தியாவை முந்தி, எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், அதிக வெற்றிகளைப் பெற்ற இரண்டாவது அணியாக பாகிஸ்தான் மாறியுள்ளது. முதலாவது இடத்தில் அவுஸ்திரேலியா உள்ளது.
Related posts:
|
|