அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – அன்டி முர்ரே அதிர்ச்சித் தோல்வி!

Tuesday, January 24th, 2017

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் அன்டி முர்ரே, முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

அதேநேரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் 7ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அன்டி முர்ரே 5–7, 7–5, 2–6, 4–6 என்ற செட் கணக்கில் உலகின் 50ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரெவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

அவுஸ்திரேலிய ஓபனில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2ஆவது சுற்றோடு வெளியேறிய நிலையில், இப்போது முர்ரேவும் தோற்றுள்ளார்.

பெடரர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பின்னர் ஜப்பானின் நிஷிகோரியைத் தோற்கடித்தார். பெடரர் தனது காலிறுதியில் ஸ்வெரெவை சந்திக்கிறார்.

மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஏஞ்ஜெலிக் கெர்பர் 2–6, 3–6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கோகோ வான்டேவெக்கிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

வான்டேவெக் தனது காலிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை சந்திக்கிறார். முகுருஸா தனது முந்தைய சுற்றில் 6–2, 6–3 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் கிறிஸ்டியாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் மூத்த வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6–3, 7–5 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் மோனா பார்த்தேலை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

coltkn-01-24-fr-04150755411_5175544_23012017_MSS_CMY

Related posts: