அரையிறுதிக்கு முன்னேறியது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!

Tuesday, September 27th, 2016

கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி அணிக்கெதிராக இடம்பெற்ற கொத்மலை சொக்ஸ் கால்ப்பந்தாட்டத்  தொடரின் காலிறுதிப் போட்டியில், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி பெனால்டி முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான கொத்மலை சொக்ஸ் கால்பந்தாட்ட தொடரின்  முதலாவது காலிறுதிப் போட்டி நேற்று சிற்றி லீக் மைதானத்தில் இடம்பெற்றது.

ஏற்கனவே இடம்பெற்ற குழு மட்டத்திலான முதல் சுற்றுப் போட்டிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா ஏழு அணிகள் போட்டியிட்டன.

அனைத்து அணிகளும் தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை வீதம் மோதின. நான்கு குழுக்களிலும் இருந்து முதல் இரு இடங்களைப்பெற்ற அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தெரிவாகின.

அந்தவகையில் நேற்று இடம்பெற்ற முதலாவது காலிறுதிப்போட்டியில் குழு “டி” யில் இடம்பிடித்த யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி  அணியும், குழு “ஏ” யில் இடம்பிடித்த கொழும்பு ஹமீத் அல்-ஹுசெய்னி கல்லூரி அணியும் ஒன்றையொன்று சந்தித்தன.

போட்டி ஆரம்பமாகியது முதல் ஆட்டம் விறுவிறுப்பாக இடம்பெற்றது. போட்டியின் 3 ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி அணிக்கு  ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.

ஹமீத் அல் ஹுசெய்னி வீரர் கரீம் பாசில் பந்தை உதைய, அதனை அணித்தலைவர் அமான் கோலாக மாற்றி அணியை முன்னிலை பெறச் செய்தார்.

ஹமீத் அல் ஹுசெய்னி வீரர்கள் மேலும் கோல் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதிலும் புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் பின் கள வீரர்களின் சிறப்பான செயற்பாட்டால் அம் முயற்சிகள் கைகூடவில்லை.

ஆட்டத்தின் முதல் பாதியின் 45 நிமிடங்கள் கடந்த நிலையில், மேலதிக நிமிடத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு கோணர் உதைக்கான வாய்ப்பொன்று கிடைத்தது.

பத்திரிசியார் அணி வீரர்  ஆர். ஷாந்தன் கோணருக்கான பந்தை உயர்வாக செலுத்த அதனை  அபீஷான் தலையால் முட்டி கோலாக மாற்றி அணியின் நிலையை சமப்படுத்தினார்.

பின்னர் தீர்மானம் மிக்க இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடினர். இரு அணி வீரர்களும் தமது அணிக்கான வெற்றிக் கோலைப் போடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அந்த வாய்ப்புகள் எதுவும் கைகூடவில்லை.

எவ்வாறிருப்பினும் இரு அணியினரும் இரண்டாவது பாதியில் எந்த கோல்களையும் போடவில்லை. எனவே போட்டியின் வெற்றிதோல்வியை தீர்மானிப்பதற்காக பெனால்டி உதைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

புனித பத்திரிசியார் அணியின் கோல்காப்பாளர் பிருந்தாபன் சிறந்த முறையில் 3 பெனால்டி உதைகளை தடுத்து நிறுத்த, யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி 3-1என பெனால்டி முறையில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கொத்மலை சொக்ஸ் கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகிய முதல் அணியாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி திகழ்கின்றது.

இப் போட்டியின் சிறந்த வீரராக சிறப்பாக பெனால்டி உதைகளை இலவகமாக தடுத்து வெற்ளிக்கு வித்திட்ட புனித பத்திரிசியார் அணியின் கோல் காப்பாளர் பிருந்தாபன் தெரிவுசெய்யப்பட்டார்.

ssa

jaffna-SPC

Related posts: