அயர்லாந்தை வென்றது ஆப்கானிஸ்தான்!

Thursday, July 14th, 2016

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் அயர்லாந்தில் இடம்பெற்றுவரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், தொடரில், 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து, முதலில் ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாட பணித்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, மொஹம்மட் ஷஷாட் 66, நஜிபுல்லா ஸட்றான் 59 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அயர்லாந்து அணி சார்பாக, கெவின் ஓ பிறைன், பரி மக்கிராத்தி ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு 251 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 39 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக எட் ஜொய்ஸ் 62, கெவின் ஓ பிறைன் 35 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக, ரஷீட் கான், மொஹம்மட் நபி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் டவ்லட் ஸட்ரான், மிர்வாய்ஸ் அஷ்ரஃப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டு அணிகளுக்கிடையேயான முதலாவது போட்டியில், மழை காரணமாக, எந்தவொரு பந்தும் வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: