அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி!

Friday, September 9th, 2016

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு கரோலினா பிளிஸ்கோவா முற்றுப்புள்ளி வைத்ததால் செரீனாவின்  23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 10 நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். போட்டியில் செரீனாவின் வழக்கமான அதிரடி காணப்படவில்லை என்றே கூறலாம். செரீனா வில்லியம் யாரும் எதிர்பாராத வகையில் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் பறிகொடுத்தார். இருப்பினும் இரண்டாவது செட்டில் போராடினார். செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது செட்டை சுதாரித்து ஆடினாலும், பலனில்லாமல் போனது. போட்டியின் இறுதியில் கரோலினாவின் கையே ஓங்கியது. நம்பர்-ஒன் வீராங்கனை, தொடர் வெற்றியாளர் என பல்வேறு புகழுக்கு சொந்தமான செரீனா வில்லியம்ஸ் 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் செட்டை கரோலினாவிடம் பறிகொடுத்து போட்டியை விட்டு வெளியேறினார்.

வெற்றியின் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த கரோலினா அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

23–வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கு குறி வைத்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்த செரீனாவின் கனவு தகர்ந்தது. அதிரடி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வீழ்ந்தது, அவருடைய ரசிகர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.

 ”கரோலினா இன்று சிறப்பாக ஆடினார்,” என்று செரீனா வில்லியம்ஸ் கூறினார். செரீனாவை வீழ்த்தியது நம்ப முடியாதது என்று கரோலினா மகிழ்ச்சி பொங்க கூறினார். ”இது நம்ப முடியாதது, இது மிகவும் சிறந்த நாள்.” என்று கரோலினா கூறிஉள்ளார்.

நம்பர்-ஒன் வீராங்கனையை விரட்டிய கரோலினா, இறுதி ஆட்டத்தில் மற்றொரு டென்னிஸ் புயல் 2-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் கெர்பரை சந்திக்கிறார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் சாம்பியன் கெர்பர், அரைஇறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கியை 6-4 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

12

Related posts: