அணிகள் ஒத்துழைத்தால் இரவு ஆட்டம் நடைபெறும்!

அணிகள் ஒத்துழைத்தால் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து இரவு ஆட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் தயாளபாலன் தெரிவித்துள்ளார்..
யாழ்.மாவட்ட கரப்பந்தாட்டங்களை இரவு நேரங்களில் நடத்துவதால் நடுவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கருதி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு கரப்பந்தாட்ட வீரர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டனர். தற்போது வீரர்கள் அனைவரும் தமது தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே விளையாட்டில் பங்குபற்றுகின்றனர்.
பகல்வேளையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டால் அவற்றில் பங்குபற்றமுடியாத நிலை உருவாகலாம் என்று அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனது முடிவைத் திரும்பப் பெறும் நிலைக்கு கரப்பந்தாட்டச் சங்கம் வந்துள்ளது. இது தொடர்பாக யாழ்.மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கச் செயலாளர் கருத்து தெரிவிக்கையில் இரவு நேரங்களில் ஆட்டங்களை நடத்துவதால் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் குழப்பம் விளைவிக்கின்றனர். இது தொடர்பாக அணிகளிடம் கேட்கும் போது தாங்கள் பொறுப்பில்லை எனக் கூறுகின்றனர். நடுவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். இதற்கு அணிகள் ஒத்துழைத்தால் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து இரவு வேளையில் ஆட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|