அணிகளின் வருகைக்காக பாகிஸ்தானின் புதிய திட்டம்!

Saturday, July 16th, 2016

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வெளிநாட்டில் இருந்து அந்நாட்டில் கிரிக்கெட் விளையாட வரும் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்க நான்கு குண்டு துளைக்காத நவீன பேருந்துகளை வாங்கியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஆறு இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர், ஆறு பாதுகாப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் இரண்டு பொதுமக்களும் உயிர் இழந்தனர்.

அதன்பின் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது. இதன் விளைவாக சொந்த மண்ணில் விளையாட வேண்டிய அனைத்து போட்டிகளையும், பாகிஸ்தான் வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது.

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருக்கும் ஷகாரியார் கானின் தீவிர முயற்சியால் 2015 மே மாதம் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சென்று விளையாடியது. அதன்பின் மற்ற அணிகளை சமாதானப்படுத்தி பாகிஸ்தானுக்கு வரவைக்கவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல வழிகளை கடைபிடித்து வருகிறது.

முதல் முயற்சியாக வீரர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கினால், அவர்கள் பாகிஸ்தான் வர சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறது. இதனால் குண்டு துளைக்காத நவீன செகுசு பேருந்து வாங்க முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நான்கு குண்டு துளைக்காத பேருந்துகளை வாங்கியுள்ளது

Related posts: