அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்தது மும்பை!

Saturday, May 5th, 2018

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளது மும்பை அணி.

ஐபிஎல் தொடரின் இன்றைய 34-வது லீக் போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் களமிறங்கினர்.

போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய ராகுல் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன் பின் வந்த யுவராஜ் 14, கருண் நாயர் 23 என வெளியேறினாலும், மற்றொரு துவக்க வீரரான கெய்ல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.

அரைசதம் அடித்த அவர் அடுத்த பந்தையே சிக்ஸருக்கு பறக்க விட முயற்சி செய்து கட்டிங் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் வந்த அக்சர் பட்டேல் மற்றும் ஸ்டோனிக்ஸ் அதிரடி காட்ட பஞ்சாப் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் கெய்ல் 50 ஓட்டங்களும், ஸ்டோனிக்ஸ் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக சூர்ய குமார் யாதவ், ஈவின் லிவிஸ் களமிறங்கினர்.

லிவிஸ் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த இசான் கிஷான் 25 என வெளியேறியதால் போட்டியில் பரபரப்பு துவங்கியது.

இருப்பினும் ஒன் மேன் ஆர்மியாக சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.

57 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் வெளியேற, அடுத்து வந்த ஹார்திக்-ரோகித் சர்மாவுடன் இணைந்து அதிரடி காட்ட மும்பை அணி வெற்றியை நோக்கி சென்றது.

ஹார்திக் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறியதால், மீண்டும் போட்டி பஞ்சாப் பக்கம் திரும்பியது.

ஆனால் கடைசி கட்டத்தில் வந்த க்ருணல் பாண்ட்யா 12 பந்துகளில் 31 ஓட்டங்கள், ரோகித் 15 பந்துகலில் 24 ஓட்டங்கள் என எடுக்க மும்பை அணி 19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 9 போட்டிகளில் 3 வெற்றி 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணி 8 போட்டிகளில் 5 வெற்றி 3 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் இன்றைய வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளது, அதே சமயம் மற்ற அணிகளுக்கு நடைபெறும் போட்டியின் முடிவைப் பொறுத்து பிளே ஆப் சுற்று வாய்ப்புகள் மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.

Related posts: