அசார் அலி சதம் !

மேற்கிந்திய தீவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் நேற்றுமுன்தினம் ஆட்டத்தில் அசார் அலி 122 ஓட்டங்களுடனும், மிஸ்பா உல் – ஹக் 18 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டோமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டெஸ்ட் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி மதிய உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
இடைவேளையின் போது மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 69 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்தது. ஷான் மசூத் 9 ஓட்டங்களும் பாபர் அசாம் 55 ஓட்டங்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் அசார் அலி 85 ஓட்டங்களுடனும், யூனிஸ்கான் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய யூனிஸ்கான் 18 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து கேப்டன் மிஸ்பா உல்-ஹக், அசார் அலியுடன் இணைந்தார். நிலைத்து நின்று ஆடிய அசார் அலி சதம் அடித்தார். அவர் அடித்த 14-வது சதம் இதுவாகும்.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட் இழந்து 336 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. அசார் அலி 127 ஓட்டங்களும், மிஸ்பா உல்-ஹக் 59 ஓட்டங்களும் பெற்றதே கூடுதலான ஓட்டமாகும். விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட் 51 ஓட்டங்களையும் பெற்றார்.மேற்கிந்திய தீவு சார்பாக சேஷ் 4 விக்கெட்டையும் ஹோல்டர் 3 விக்கெட்டையும் ஜோஷப் ஒரு விக்கெட்டையும் பிஷூ இரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர் . இதேவேளை மேற்கிந்திய அணி 11 ஓவர்களை எதிர் கொண்டு 14 ஓட்டங்களை பெற்றது.
Related posts:
|
|