9 ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்த பிரமாண்டமான பூ!
Monday, August 1st, 2016கேரள வயநாடு மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை பூங்காவில் பிணவாடையை விட மிக கொடூரமான வாசம் வீசும் பிரமாண்ட உருவம் கொண்ட துர்நாற்றப் பூ ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்துள்ளதால் இதைப் பார்த்து ரசிக்க ஏராளமான மக்கள் படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர்.
சாதாரணமாக, பூக்கள் என்றாலே மனதுக்கு இதம்தரும் கொள்ளை அழகும், மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இனிய நறுமணமும்தான் நமது நினைவுக்கு வரும். ஆனால், வெளிநாடுகளில் டைட்டான் அரும் (Titan Arum, Amorphophallus titanum) எனப்படும் உலகிலேயே மிகப் பெரிய அளவிலான பூக்கள் அவ்வப்போது பூப்பதுண்டு.
நட்டு வளர்க்கும் செடிகளில் பத்தாண்டுகளுக்கு பின்னர் அரும்புவிடும் இந்த மலர்கள், மொட்டுப் பருவத்தில் இருந்து பூப்படைய சுமார் 24 மணி நேரம் ஆகும். முழுமையாக மலர்ந்த பின்னர் இவற்றில் இருந்து கெட்டுப்போன இறைச்சியைவிட மிக மோசமான துர்நாற்றம் வீசுவதால் பிணப்பூ (corpse flower) என்று இவை அழைக்கப்படுகின்றன.
முழுமையாக பூத்த பின்னர் சுமார் 48 மணிநேரமே உயிர்வாழும் இந்தப் பூக்கள், பின்னர் வதங்கி, சுருங்கி, இறந்து விடுகின்றன. இவ்வகையிலான, ஒரு பூச்செடியின் விதையை இந்நோனேசியா நாட்டில் இருந்து கொண்டுவந்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் வடபகுதியில் ஆலட்டில் என்ற இடத்தில் உள்ள குருகுலா தோட்டக்கலை பூங்காவில் நடவு செய்து வளர்த்து வந்துள்ளனர்.
9 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த செடி தற்போது முதன்முதலாக பூத்துள்ளது. இதுபற்றிய செய்தி அறிந்த அம்மாவட்ட மக்கள் இந்த பிரமாண்டமான பூவை பார்த்து ரசிக்க கூட்டம், கூட்டமாக படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இன்னும் 48 மணி நேரத்தில் அது இறந்துவிடும் என்பதால் அந்தப் பூவில் இருந்துவரும் துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல் அதன் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொள்ளவும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள ஒரு பூங்காவில் இந்த வகை பூவில் ஒன்று மொட்டுப் பருவத்தில் இருந்து முழுமையாக பூப்பதையும். பின்னர், வதங்கி, சுருங்கி, இறந்துப் போவதையும் இங்குள்ள வீடியோவில் காணலாம்.
Related posts:
|
|