பெண்களுக்கு அச்சுறுத்தலான 15 பகுதிகளை அடையாளப்படுத்திய ஆர்வலர்கள்!

Tuesday, June 4th, 2019


சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரத்தில் பெண்களுக்கு அச்சுறுத்தலான 15 பகுதிகளை சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு தெரியும்படி அடையாளப்படுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பெர்ன் நகரத்தில் பெண்களுக்கு அச்சுறுத்தலான 15 பகுதிகளை சமூக ஆர்வலர்கள் குழு ஒன்று பொதுமக்களுக்கு நினைவூட்டும்படி விளம்பரப்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஜூலை மாதம் பேருந்து நிறுத்தம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

அந்த பேருந்து நிறுத்தத்தில், குற்றம் நடந்த பகுதி எனவும், பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் அடையாளப்படுத்தியிருந்தனர்.

மேலும், Monbijou Park பகுதியில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் பொதுவெளியில் இளம்பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையான சம்பவத்தை சுட்டிக்காட்டவும், குறித்த பகுதியில் சமூக ஆர்வலர்கள் அடையாளப்படுத்தியிருந்தனர்.

மட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுக்க இருப்பதாக பெண்கள் அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான ஊதிய சமத்துவம் அல்லது பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுமல்ல ஆணாதிக்க வன்முறைக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பணிபுரியும் இடங்களில், குடியிருப்புகளில், தெருக்களில் என பெண்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளை தாங்கள் அம்பலப்படுத்தி வருவதாக கூறும் பெண்கள் அமைப்புகள்,

இதுவரை உரிய நடவடிக்கைகள் மட்டும் அரசு நிர்வாகத்தால் மறுக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினர்.