விண்ணுக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் சோதனை வெற்றி!

Friday, July 6th, 2018

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
மனிதனை விண்ணுக்கு அனுப்புவது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ‘பேட் அபார்ட் டெஸ்ட்’ என்ற சோதனை நடைபெற்றது. அதன்படி, 12.6 டன் எடை கொண்ட ஆளில்லா விண்கலமானது விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்கலம் 2.7 கி.மீ தூரத்தை அடைந்தவுடன் வங்காள விரிகுடா கடலில் விழும் வகையில் திருப்பிவிடப்பட்டது. அப்போது விண்கலத்தில் விஞ்ஞானிகள், மனிதர்கள் இருக்கும் பகுதி தனியாக பிரிந்து பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2.9 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்தது. இந்த சோதனை 259 விநாடிகளில் முடிந்தது.
இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டு ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் மூலம் ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது. தற்போது வரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
அந்தவகையில், இந்தியாவும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பினால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்ட 4ஆவது நாடு என்ற பெருமையைப் பெறும். இந்த திட்டத்துக்கு சுமார் 17,000 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.