விஞ்ஞானிகளின் மிகப்பெரும் தவறு – அழிவை நோக்கி உலகம்!

Thursday, July 27th, 2017

உலக வெப்பமயமாதல் விளைவு தொடர்பாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தங்களது கணிப்பில் தவறிழைத்துள்ளதாக புதிய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.வெப்ப மயமாதலில் இருந்து உலகை காப்பாற்றுவது முடியாததாகிப் போகக்கூடிய அளவிற்கு தற்போதைய சூழல் உள்ள நிலையில், அடிப்படையான வெப்பநிலை அளவீட்டை தவறாக விஞ்ஞானிகள் கணக்கிட்டு வைத்திருந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

மனிதர்கள் பெருமளவிலான கார்பன் வாயுகளை வளிமண்டலத்தில் செலுத்தத் தொடங்கிய தொழிற்புரட்சி நடைபெற்று நூற்றாண்டிற்கு பிறகு, அதாவது 19ம் நூற்றாண்டின் காலநிலையுடன் ஒப்பிட்டு உலக வெப்ப மயமாதல் கணிக்கப்பட்டு வருகிறது.தொழிற்புரட்சிக்கு முன்னர் உலகின் உண்மையான வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸ் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், தற்போதைய உலக வெப்பமயமாதல் அளவு கணிக்கப்பட்டதை விட 0.2 டிகிரி அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே கணிக்கப்பட்டதை போல உலக வெப்பமயமாதல் அளவு 1 டிகிரி செல்சியஸ் அல்ல, 1.2 டிகிரி செல்சியஸ் என புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி, உலகம் மீளமுடியாதபடி மிக மோசமான விளைவுகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில், உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ்-க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுவரை 1 டிகிரி மட்டுமே உலக வெப்ப மயமாதல் வெப்பநிலை அதிகரிப்பு என்று கூறப்பட்டு வந்ததால் இன்னும் 0.5 டிகிரி செல்சியஸ் அபாயகர அளவுக்கு உள்ளதாக கருதப்பட்டது. ஆனால், புதிய ஆய்வுகள் 0.3 டிகிரி செல்சியஸ் மட்டுமே வித்யாசம் உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது.