மலைக்கு வெளியே அமைக்கப்பட்ட விடுதி!

Saturday, March 12th, 2016

மெக்ஸிகோவில் விநோதமான இடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது காப்பர் கேன்யன் காக்டெயில் பார். பஸாசியாசிக் அருவிக்கு எதிர்ப்புறம் இருக்கும் உயரமான மலையின், பக்கவாட்டில் இந்த விடுதி கட்டப்பட்டிருக்கிறது.

மலையில் இருந்து கட்டிடம் வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. இதன் தரைத்தளம் முழுவதும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் நீச்சல் குளமும் உண்டு. இந்த விடுதிக்குச் செல்வதென்றால், கயிற்றைப் பிடித்துக்கொண்டு மலையேறிச் செல்ல வேண்டும்.

உணவோடு, எதிரில் கொட்டும் அருவியை ரசிக்கலாம். சாப்பிட்டு முடித்தால், மொட்டை மாடிக்குச் சென்று இயற்கை அழகை ரசித்துக்கொண்டே அமர்ந்திருக்கலாம். கண்ணாடி உடைந்துவிடுமோ என்ற பயம் ஒருவிதமான அமிலத்தை வயிற்றில் சுரக்கும். ஆனால் எந்த ஆபத்தும் நேராது என்கிறார்கள் விடுதியின் உரிமையாளர்கள்.

துபாயின் புர்ஜ் கலிஃபா உலகின் உயரமான விடுதி என்ற பெயரை 2011-ம் ஆண்டில் இருந்து பெற்றிருக்கிறது. இனி காப்பர் கேன்யன் அந்த இடத்தைப் பிடிக்கலாம் என்கிறார்கள்.

அமெரிக்காவில் ஏழை எளிய மக்களுக்காக உணவுகளை இலவசமாக வழங்கி வந்த சூப் கிச்சன் ஒன்று, தரமான உணவு விடுதியாக மாற்றம் அடைந்திருக்கிறது. எபிஸ்கோபல் கம்யூனிட்டி சர்வீசஸ் என்ற நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக இந்த சூப் கிச்சனை நடத்தி வந்தது. இது கடந்த பிப்ரவரி மாதம் புதிய அவதாரம் எடுத்தது.

விடுதியின் அமைப்பு, மேஜை, நாற்காலி, உள் அலங்காரம், உணவுகள் என்று ஒரு தரமான உணவு விடுதிக்குரிய அத்தனை அம்சங்களோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணியிலிருந்து 2 மணி வரை இங்கே உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

வாயிலில் சாப்பிட வருகிறவர்களை அன்புடன் வரவேற்கிறார்கள். நாற்காலியில் அமர வைத்து, அன்றைக்குரிய சிறப்பு உணவுகளைச் சொல்கிறார்கள். விரும்பியதைக் கேட்டுச் சாப்பிட வேண்டியதுதான். புகழ்பெற்ற செஃப் மைக்கேல் கரியின் தலைமையில் இந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. உணவுகள் சுடச் சுடப் பரிமாறப்படுகின்றன. “இந்த விடுதி ஏழை எளிய மக்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களும் வந்து சாப்பிடலாம். ஆட்சேபம் இல்லை.

தினமும் உணவுகள் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் சூப் கிச்சன் போல இந்த விடுதி சலிப்பை ஏற்படுத்தாது. ஆரோக்கியமான, சுவையான உணவுகளைத் தரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்கள் விடுதிக்கு மாணவர்கள் பயிற்சிக்காகவும் தன்னார்வலர்கள் சேவை செய்யும் நோக்கோடும் வந்து வேலை செய்கிறார்கள். யார் வேண்டுமானாலும் சாப்பிட வரலாம். ஆனால் வரிசையில் நின்று, உள்ளே நுழைய வேண்டும் என்பதுதான் ஒரே கட்டுப்பாடு.

ஏழைகளின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பதற்குத்தான் இத்தனை பேரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இங்கே உணவு மட்டுமில்லாமல், அன்பு, கனிவு, அக்கறை, மரியாதை எல்லாம் கூடுதலாகக் கிடைக்கும். நானும் ஒருகாலத்தில் சூப் கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன்தான். இன்று அதைத் திருப்பி அளிக்கிறேன்’’ என்கிறார் இதன் டைரக்டர் மேண்டி கருசோ யானே.

(நன்றி இணையம்)

Related posts: