தென் கொரியாவில் கலக்ஸி நோட் 7 விற்பனையை தாமதப்படுத்தும் சாம்சங் நிறுவனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/09/91376713_gettyimages-585208050.jpg)
உலகெங்கிலிருந்தும், கலக்ஸி நோட் 7 கைப்பேசியை திரும்பப் பெறுவதில் சாம்சங் நிறுவனத்துக்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதால், தென் கொரியாவில் அதன் விற்பனை மீண்டும் தொடங்குவதைத் தான் தாமதப்படுத்தவிரும்புவதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், பேட்டரிகள் அதிக வெப்பமடையும் பிரச்சினை காரணமாக உலகளவில் சுமார் 2.5 மில்லியன் கைப்பேசிகளை மீண்டும் திரும்பப்பெற வேண்டிவந்தது.
பல ஆயிரக் கணக்கான கைப்பேசிகள் தீ பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த கைப்பேசி செப்டம்பர் 28 ஆம் திகதி மீண்டும் விற்பனைக்கு வர இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1 ஆம் திகதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி, சாம்சங் நிறுவனம் கலக்ஸி நோட் 7 கைப்பேசியின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், ஏற்கனவே விற்கப்பட்ட கைப்பேசிகளுக்கு மாற்று கைப்பேசியை வழங்க முன்வந்தது.
ஏற்கனவே விற்கப்பட்ட கைப்பேசியை பயன்படுத்த வேண்டாம் எனவும் சாம்சங் வலியுறுத்தி இருந்தது. உலகளவில் கலக்ஸி நோட் 7 கைப்பேசியின் திரும்பப்பெற்ற சம்பவம் 10 சந்தைகளை பாதித்தது. தென் கொரியாவில் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் கைப்பேசியை திருப்பி அளித்துள்ளதாகவும், அதே எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இன்னும் திருப்பி அளிக்கவில்லை என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்தியாவில் பயணிகள் விமானம் ஒன்றில், விமான பணியாளர் குழு, தீ அணைக்கும் கருவியை கொண்டு பழைய சாம்சங் கைப்பேசியிலிருந்து வெளிவந்த புகையை அணைத்துள்ளனர்.
அந்த சம்பவத்தில், 2012ல் விற்பனைக்கு வெளியான கலக்ஸி நோட் 2 கைபேசி, எரிந்து கொண்டிருந்ததாகவும், தீப்பொறிகளை உமிழ்ந்து கொண்டிருந்ததாகவும் இண்டிகோ விமான நிறுவனத்தில் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில், நோட் 7 கைப்பேசிகளை மீண்டும் திரும்பப்பெற அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதே சமயம், நாட்டின் மத்திய விமான போக்குவரத்துறையானது, விமான பயணிகள் நோட் 7 கைப்பேசியை விமானத்திற்குள் கொண்டுவர வேண்டாம் என்றும், அப்படி எடுத்து வந்தால் அதனை அணைத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
மேலும், விமான பயணத்தின் போது அதனை சார்ஜ் ஏற்ற கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது. உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் விமானத்தில் நோட் 7 கைப்பேசியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன.
முதலில் ஆகஸ்ட் 19 ஆம் திகதி சாம்சங் கலக்ஸி நோட் 7 போன் விற்பனைக்கு வந்தது. விமர்சகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனத்தின் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய ஐ போன் 7-ஐ வெளியிட்ட சமயத்தில் சாம்சங் நிறுவனத்தின் நோட் 7 கைப்பேசிகள் திரும்பப் பெறப்பட்டன.
Related posts:
|
|