செவ்வாய் கிரகத்தில் பண்டைய கரிமப்பொருள் கண்டுபிடிப்பு!

Monday, June 11th, 2018

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கக்கூடும் என எண்ணுவதற்கு சான்றாக 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் இன்னும் 20 வருடங்களில் செவ்வாயில் குடியேற முடியும் என்று அறிவித்துள்ள நிலையில், பல இலட்சம் கோடீஸ்வரர்கள் அதற்காக முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி, அதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை எடுத்து வருகிறது.கியூரியாசிட்டி செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும் வருகிறது.

அத்தகைய ஆய்வொன்றின் போது, அங்கே உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப்பொருள் கிடைத்துள்ளது.இந்த மாதிரிகள் 5 மில்லிமீட்டர் நீளமுள்ள மண் ௲ பாறைகள் மீது காணப்படுகின்றன.

இவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பழங்கால ஏரிப் படுக்கையில் உருவாகியுள்ளதாகவும் இதில் தியோப்பனிஸ், டூலீன், பென்சீன் மற்றும் பிற சிறிய கார்பன் சங்கிலிகள், ப்ராபேன் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.

இதனால் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிர் வாழ்க்கை இருந்திருக்க முடியும் என நாசா நம்புகிறது.

அதுமட்டுமின்றி, உயிர் வாழ்க்கைக்கு முக்கிய மூலப்பொருளான மீத்தேன் செவ்வாய் வளிமண்டலத்தில் காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக நாசா அண்மையில் அறிவித்திருந்தது.

கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆனது “கரிம” பொருள் என்று விளக்குகிறது நாசா.

பெரும்பாலும் மனித வாழ்க்கையின் முக்கிய பொருளாக இவை கருதப்படுகின்றன. என்றாலும், உயிரியல் அல்லாதவைகளாலும் இந்த மூலக்கூறுகள் உருவாக்கப்படலாம்.

எனினும், இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்தும் வாழ்க்கையின் ஆதாரங்களைத் தேடமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.