குகைக்குள் சிக்கிய சிறுவர்: மீட்பு பணியில் ஆயிரம் வீரர்கள்!

Tuesday, July 3rd, 2018

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட 12 சிறுவர்களை மீட்க ஆயிரக்கணக்கான வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.தாய்லாந்தின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. 10 கி.மீ நீளம் உள்ள இந்த குகை மியான்மர் மற்றும் லாவோஸ் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

குகைக்குள் சென்றுவிட்டால் பாதை அறிந்து திரும்பி வருவது மிகவும் கடினம். கடந்த வாரம் 11வயது முதல் 16-வயது வரை உடைய 12 சிறுவர் கொண்ட கால்பந்து அணி இந்த குகைக்குள் சென்றுள்ளது. அணியின் துணைப்பயிற்சியாளரும் உடன் சென்றார்.இவர்கள் குகைக்குள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிரமடைந்தது.

குகையை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது.சிறுவர்களை மீட்க குகைக்குள் செல்ல அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது. ஆனால் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் மீட்புப்படையினர் உள்ளே செல்ல முடியவில்லை. தாய்லாந்து நாளிதழ்களில் இந்த செய்தி 7 நாட்களாக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

உலக அளவில் செய்தி பரவியதையடுத்து பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன.இந்நிலையில் நேற்று மழை நின்றது. இதையடுத்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணி தீவிரமடைந்துள்ளது. 10 கி.மீக்கும் நீந்தியே செல்லவேண்டும் என்பதால், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.குகைக்குள் 2 அல்லது 3 கிமீ. தொலைவிற்குள் சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் என மீட்புப்படையினர் நம்புகின்றனர்.

கால்பந்து அணி பயிற்சியாளர் நோபார்ட் காத்தாங்வோங் கூறுகையில், நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. மழை நின்றுவிட்டது. மீட்புப்பணியினரும் குகைக்குள் செல்லும் வழியைக் கண்டுபிடித்துவிட்டதால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கடற்படை வீரர்கள், தண்ணீரில் தேடுதலில் நிபுணத்துவம் பெற்ற வீரர்கள் வந்துள்ளனர். ஆயிரம் பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத நீர் உறிஞ்சி பம்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.