கடலில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் ரோபோ அறிமுகம்!

Wednesday, September 7th, 2016

வளைகுடா நாடுகளில் முதன்முறையாக கடற்கரைப் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக புதிதாக அதிநவீன ரோபோக்களை துபாய் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

இவை கடற்கரையில் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாய் கடற்கரை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இவர்களில் பலர் கடலில் நீந்தி விளையாடுகின்றனர். இந்நிலையில், கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம், திடீர் சீற்றம், இராட்சத அலைகள் போன்றவற்றில் சிலர் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்படும்போது கடற்கரை மீட்புக் குழுவினர் உடனடியாக சென்று காப்பாற்றுவர்.

ஆனால், கடலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினர் செல்வதைக் காட்டிலும் 12 மடங்கு அதிவேகமாக அருகில் சென்று மீட்கும் வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோ செயற்படும். இவை மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

இந்த ரோபோ தொடர்ந்து 130 கிலோமீ்ட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில் சக்திவாய்ந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. சிவப்பு நிறத்தில் இரப்பர் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்களை கடலில் சிக்கியவர்கள் எளிதில் அடையாளம் காணமுடியும். இவை கடலில் தத்தளிப்பவர்களின் அருகில் சென்றவுடன் சிறிய படகுபோன்று விரியும் தன்மையுடையது. இவற்றை தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் மீட்புக் குழுவினர் இயக்க முடியும்.

கடலில் சிக்கியவர்கள் இப்படகில் ஏறியவுடன் கரைக்கு இந்த ரோபோ படகு திரும்பும். இந்த ரோபோ மூலம் ஒரே நேரத்தில் 5 பேரை மீட்க முடியும். இராட்சத அலையிலும் செயற்படும் வகையில், ரேடியோ அலைக்கற்றைகள் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் தொலைத்தொடர்பு பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

robot

Related posts: