என்றுமில்லாத வகையில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பு!

வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (CO2) அளவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்பன்-டை-ஆக்சைடின் அளவு சராசரியாக 403.3 பாகங்களை எட்டியுள்ளது.
இது 2015 இல் 400 பாகங்களாக இருந்தது, மனித நடவடிக்கைகள் மற்றும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் ஆகியவற்றின் காரணமாக இது அதிகரித்துள்ளது.
1750 ஆம் ஆண்டு முதல் தொழிற்துறை காலத்தில் வளிமண்டலத்தில் ஆபத்தான வாயுக்களின் உள்ளடக்கத்தை ஐ.நா வானிலைக் குழு கண்காணித்து வருகிறது.
கிரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிக்கா போன்ற இடங்களில் பனிக்கட்டிகளுக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும் காற்று குமிழ்களைப் பயன்படுத்தி 8,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் காற்றில் இருந்த வாயுக்கள் குறித்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதைபடிவ பொருள்களை ஆராய்ந்து அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்த அளவுகள் குறித்தும் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கண்டுப்பிடிப்புகளை வைத்து கடந்த மூன்று முதல் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது உள்ளது போன்ற நிலை இருந்துள்ளது என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
அப்போது கடல் மட்டமானது, இப்போது உள்ளதைவிட 20 மீட்டர் உயரமாக இருந்திருக்கலாம் எனவும், வெப்பநிலையும் இப்போது இருப்பதைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில், வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு கடந்த 8 இலட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2016 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.
கார்பன்-டை-ஆக்சைட் மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவுகளை குறைக்கவில்லை எனில், இந்த நூற்றாண்டு முடிவதற்குள் பூமியின் வெப்பம் அதிகரித்து பேரழிவை சந்திக்க நேரிடும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைய கடுமையான நடவடிக்கைகள் தேவை என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|