உலகில் முதலிடம் வகிக்கும் கலை அருங்காட்சியகம் ‘லூவ்ர்’ (Louvre)
Tuesday, September 13th, 2016பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸின் மையத்தில் அமைந்துள்ள ‘லூவ்ர்’ அருங்காட்சியகம் உலக அளவில் முதலிடம் வகிக்கும் ஒரு மகத்தான தனிப்பட்ட கலை அருங்காட்சியகமாகும் விளங்குகின்றது.
2014 இல் மட்டும் 9.26 மில்லியன் மக்கள் வருகைதந்துள்ளனர். அன்றிலிருந்து இன்றுவரை வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
கி.மு. 8000 காலம் தொடக்கம் 1848 ஆம் ஆண்டு வரையான 35 000 க்கும் அதிகமான அரும்பொருட்கள் 60 600 சதுர மீற்றர் நிலஅளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரும்பொருட்கள் இங்கே மேலும் மேம்படுத்தப்பட்டு மனித மற்றும் அதன் படைப்பாற்றல் கதைகளை சொல்வனவாகவும் விளங்குகின்றது.
காட்சியகம் கிழக்கத்தேய, எகிப்திய, கிரேக்க தொல்பொருட்கள், ஈட்ரூஸ்கேன் மற்றும் ரோமன் கலைப்பொருட்கள், இஸ்லாமிய கலைப்படைப்புக்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடக்கலை வடிவங்கள் என எட்டுப்பிரிவுகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. லியனாடோ டாவின்சியின் மோனாலிசா ஓவியமும் இதில் அடங்கும்.
தற்போதைய அருங்காட்சியகம் 1190 இல் பிலிப் ஓகஸ்ட் மன்னனால் தலைநகரை பாதுகாப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட அரச கோட்டையாகும்.
தொடர்ந்து பல மன்னர்களின் பாதுகாப்பு மையமாகவும் அரச வதிவிடமாகவும் திகழ்ந்துள்ளது. 1678 இல் பதினான்காம் லூயி மன்னன் வெர்சய் (Versailles) அரண்மனையை அரச வதிவிடமாகத் தெரிவு செய்து இடம்பெயர்ந்து செல்ல, அரச மாளிகை பூட்டப்பட்டு வெறும் அரச கலைப்பொருட்களின் காப்பகமாக 100 வருடங்களுக்கு மேலாக இருந்தது.
1793 ஐப்பசி 10 ஆம் திகதி Museum Central des Arts எனப்பெயர் சூட்டப்பட்டு தற்காலிக அருங்காட்சியமாக தோற்றம் பெற்றது. லூவ்ர் அருங்காட்சியகம் என்ற பெயர்ப்பதம் 1848 ஆம் ஆண்டே சூட்டப்பட்டது.
1848 ஆம் ஆண்டு லூவ்ர் அருங்காட்சியகம் பிறந்தாலும் தற்போது நாம் அறியும் பிரபலமான உலகப்பிரசித்தி பெற்ற லூவ்ர் 1981ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பிரான்சுவா மித்திரனின் கடும் உழைப்பினாலேயே தோற்றம் கண்டது. அரச செலவில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு பிரிவுகளாக வகுக்கப்பட்டு, ஒழுங்கு படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அனைத்து கலைப்பொருட்களையும் பார்வைக்குட்படுத்தி பிரபலமாக்கப்பட்டது.
லூவ்ர் அருங்காட்சியகத்திற்கு புதுப்பொலிவை பெற்றுக்கொடுப்பதற்காகவும் ஒரு புதிய நுழைவாயிலை ஏற்படுத்தவும் கண்ணாடிகளிலான பிரம்மாண்டமான பிரமிட்டும் அதன் நிலத்தடி லூபியும் 1988 ஐப்பசி 15 ஆம் திகதி ஆரம்பித்து 1989 ஆம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டது.
கிராண்ட் லூவ்ர் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தலைகீழ் பிரமிடு (பிரமிடு இன்வர்சி) 1993 ஆம் ஆண்டு தொடங்கி 2002 ஆம் ஆண்டு வரையில் முடிக்கப்பட்டது. இதன் நிறைவிலிருந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
தற்போது லூவ்ர் அருங்காட்சியகம் கல்லுகளால் அமைக்கப்பட்ட வெறும் கட்டடமல்ல. அசைவற்ற அழியாத அரும்பொருட்களைக் கொண்ட பிரமாண்ட இடம். ஒவ்வொரு அரும்பொருளும் ஒவ்வொரு கதை சொல்லும்.
மோனலிசா ஓவியம் போல் இன்று தன்னுள் பல ரகசியங்களையும் வரலாறுகளையும் சுமந்து, உலகையே திரும்பிப் பார்க்கும் வண்ணம் ‘லூவ்ர் அருங்காட்சியகம்’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது.
Related posts:
|
|