QR குறியீட்டை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை!
Friday, August 5th, 2022சட்டவிரோதமான முறையில் QR குறியீட்டை பதிவு செய்து பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதி QR முறைமை தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.
வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளுக்கு QR குறியீட்டு முறைமையை பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், ஒரு தொலைபேசி எண்ணில் வணிக பதிவு எண் மூலம் பல வாகனங்களை பதிவு செய்தல், அரசு வாகனங்களுக்கான பிரத்யேக பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் பதிவு செய்தல், சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.
வேறு எவரும் சட்டவிரோதமாக அதைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறும் அவர் கோரியுள்ளார் அத்துடன், தற்போதைய சுயவிவர அம்சத்தை (profile feature) நீக்குவதற்கான தெரிவும், மீண்டும் பதிவு செய்வதற்கான தெரிவும் தற்போது கிடைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
போலி QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற சிலர் முயற்சித்தமை போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தகைய QR குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகவரகத்துடன் (ICTA) இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சரின் கூற்றுப்படி, நேற்று 1,004 க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR குறியீட்டு முறையைப் பயன்படுத்தி பதிவு செய்துள்ளன. மேலும் நாடளாவிய ரீதியில் மொத்தம் 1,235 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR குறியீட்டு முறையை பயன்படுத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|