IMF உடனான இறுதி ஒப்பந்தம் இம்மாதம் கையெழுத்தாகும் – ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தகவல்!
Thursday, March 2nd, 2023இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் இம்மாத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அதன் பின்னர் சர்வதேச நன்கொடையாளர்கள் மற்றும் சில நாடுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப்பறும் எனவும் ஜனாதிபதியின் இரண்டு ஆலோசகர்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது
சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுடன் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடமிருந்து இலங்கைக்கு அதிக உதவிகள் கிடைக்கும் என ஜனாதிபதியின் ஆலோசகர்களான ருவன் விஜேவர்தன மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
“நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்குப் பிறகு, சமீப காலமாக இளைய தலைமுறையினர் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே பதிலளித்தார்.
ஜனாதிபதியால் வரிசைகளை நிறுத்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது. தேசத்தின் நலனுக்காக இளைஞர்கள் தங்கள் பங்கை ஆற்றி தேசத்திற்கு நிதி உறுதிப்பாட்டை ஏற்படுத்த ஒத்துழைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” என சாகல ரத்நாயக்க கூறினார்.
இதேவேளை, பிணை எடுப்பு பொதியை பெறுவதற்கான நிபந்தனையாக, இருதரப்பு கடன்கொடுநர்களின் கடன்மறுசீரமைப்பை மாத்திரமே சர்வதேச நாணய நிதியம் கருத்திற் கொள்ளும் என்றும் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி பிஸினஸ் டைம்ஸ் அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த பிணையெடுப்பு செயல்முறையில் பலதரப்புக் கடன் மற்றும் வணிகக்கடன் என்பன கருத்திற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரையில், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பாரிஸ் க்ளப் நாடுகளும் நிதியியல் உறுதிப்பாடுகளை வழங்கியுள்ளன.
எவ்வாறாயினும், சீனாவின் எக்ஸிம் வங்கியினால் வழங்கப்பட்டுள்ள கடன் மீள் செலுத்துவதற்கான இரண்டு வருட கால அவகாசம் போதுமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
எனினும், இலங்கைக்கு வழங்கிய கால அவகாசத்தை சீனா மீண்டும் ஒரு முறை உறுதிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|