CID அதிகாரிகளுக்கு அனுமதி இன்றி வெளிநாடு செல்ல தடை!

Tuesday, November 26th, 2019

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா முறையான அனுமதியின்றி வெளிநாடு சென்றமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் தலைமையகம் குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அத்துடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெறும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பல சர்ச்சைக்குரிய விசாரணைகளுக்கு தலைமை தாங்கிய குற்ற புலனாய்வுத் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி ஏடியன் நிசாந்த சில்வா, நேற்று தனது குடும்பத்தினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுவிஸர்லாந்து நோக்கி புறப்பட்டிருந்தார்.

இவ்வாறு அவர் அவசரமாக வெளிநாடு சென்றமை தொடர்பில் பொலிஸ் தலைமையகம் இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதற்கமைய அவர் கடந்த காலங்களில் குற்ற புலனாய்வு பிரிவின் பல்வேறு முக்கிய விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்தாகவும் அவ்வாறான நிலையில் அவர் எந்தவித அனுமதியும் இன்றி வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை பாரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இதுதொடர்பில் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவர் தனிபட்ட ரீதியிலோ அல்லது கடமையின் நிமிந்தமோ வெளிநாடு செல்ல வேண்டுமாயின் அதற்கு குறித்த அமைச்சின் செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டியது கட்டாயம் என்றாலும் நிசாந்த சில்வா அவ்வாறான எந்தவொரு அனுமதியை பெறாமலட வெளிநாடு சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது குற்றபுலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் எந்தவித அனுமதியும் இன்றி வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தால் அவரை விமான நிலைய குற்றபுலனாய்வு பிரிவில் ஒப்படைக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்கத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 704 பொலிஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு;ள்ளது.

இந்த நிலையில் நிசாந்த சில்வா உள்ளிட்ட மேலும் பல குற்றபுலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தற்போது நடைபெறும் வழக்கு விசாரணைகளில் சாட்சியாளர்களாக காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனவே அவர்கள் அவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்வதால் வழக்கு விசாரணைகளுக்கு தடை ஏற்படவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி நிலைமையினை கருத்திற்கொண்டே குறித்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை குடி வரவு குடியகல்வு திணைக்கத்திற்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உரிய நநடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த காலத்தில் குற்றபுலனாய்வு திணைக்களம் செயற்பட்ட விதம் தொடர்பில் ராவண பலய, பௌத்த தகவல் கேந்திர நிலையம், சிங்கள அபி தேசிய அமைப்பு, மகாஜன யுத்துகம் கெத்திரய மற்றும் சிங்களே தேசிய அமைப்பு ஆகியன இன்று பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவுச் செய்தன.

Related posts: