94 மருத்துவ சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த முஸ்தீபு!

தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் அரசாங்கம் தங்களுக்கு சாதகமான தீர்மானத்தை எடுக்காத காரணத்தினால் எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் 05 ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் ஒரு நாள் வேலை நிறுத்தமொன்றை செய்யவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல்வேறு முனைகளில் போராட்டங்களை நடத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு அமைப்புகளும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
எனினும் அரச தரப்பில் இதற்கு சாதகமான முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
இக்கலந்துரையாடலின்போதே எதிர்வரும் 03 ஆம் திகதிக்கும் 05 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாகவும் எதிர்வரும் 09 ஆம் திகதிக்குள் அரசாங்கத்தின் சாதகமான பதில் கிடைக்காவிடில் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வதற்கான திகதி நிர்ணயிக்கப்படுமென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்வதற்கு சுமார் 94 தொழிற்சங்கங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வேலைநிறுத்தம் மக்களின் நலன் கருதி செய்யப்படும் விடயமென்பதால் பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related posts:
|
|