9 வயதுச் சிறுவனிடம் குளோரின் கரைக்க கொடுத்த சுகாதார உத்தியோகத்தர்கள் – விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல்!

Monday, December 31st, 2018

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகளுக்கு கிருமி கொல்லி மருந்துகள் இடும் செயற்பாடுகள் முல்லைத்தீவில் இடம்பெறுகின்றன. குளோரின் கிருமிநாசினியை 9 வயதுச் சிறுவனைக் கொண்டு கரைத்து கிணற்றில் ஊற்றுமாறு சுகாதார உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக மாங்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

வீடு ஒன்றுக்குச் சென்ற உத்தியோகத்தர்கள் இருவர் வீட்டில் இருந்த 9 வயதுச் சிறுவனைக்கொண்டு குளோரின் கிருமிநாசினியைக் கரைத்துள்ளனர். சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிருமிநாசினிகளை அந்தச் சிறுவன் வெற்றுக் கைகளால் கரைத்தான் என்றும் கரைத்த குளோரினை சிறுவனே கிணற்றில் ஊற்றினான் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் சிறுவன் விடயத்தைக் கூறியுள்ளான். பெற்றோர்களால் முல்லைத்தீவு மாவட்டச் செயலருக்கு சம்பவம் தெரியப்படுத்தப்பட்டது.

குளோரின் இடப்படும்போது முகமூடி அணிந்து கொள்ளுமாறும் கையுறைகளைப் பயன்படுத்துமாறும் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்களையே அப்பணிகளைச் செய்யுமாறும் பணித்திருந்தோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை குறித்த செயற்பாட்டில் ஈடுபடுத்தக் கூடாது என்பது தொடர்பில் அவர்களிற்கு போதுமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அந்த இரு உத்தியோகத்தர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விசாரணை மாவட்டச் செயலருக்கு அனுப்பப்படும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

Related posts: