68 வீதமான பாடசாலை சீருடைத் துணிகள் வலய அலுவலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன – இராஜாங்க அமைச்சரான பியல் நிஷாந்த தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022

மாணவர்களின் பாடசாலை சீருடை துணிகளில் 68% ஆனவை ஏற்கனவே வலய அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரான பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் – பாடசாலை சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் நாளிதழ் ஒன்றில் வெளியான தவறான செய்தி தொடர்பில் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மக்கள் அரசாங்கம் என்ற வகையில் கல்விக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் கல்விக்காக 7.51% ஒதுக்கப்பட்டிருப்பது கல்வித்துறையின் முன்னேற்றத்துக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

கடந்த இரண்டு வருடங்களில் பாடசாலை நடைபெறாத போதிலும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள், பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகளுக்கான வவுச்சர்களுக்காக 4.5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்துக்குத் தேவையான ஒரு கோடி 26 இலட்சத்து 94 ஆயிரம் மீற்றர் துணிகளில் 68% ஏற்கனவே வலய அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள சீருடைத் துணிகள் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் வலய அலுவலகங்களுக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெற முனைந்தாலும், அவ்வாறான குறுகிய நோக்கங்களை அடைய இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பொறுப்புள்ள ஊடக நிறுவனங்கள் என்ற வகையில் செய்திகளை வெளியிட முன்னர் உண்மைகளை ஆராய்ந்து பொறுப்புடன் அறிக்கையிடுமாறும் அவர் ஊடகவியலாளர்களிடம்  கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: