50 வீதத்தால் நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு !

Monday, May 23rd, 2016
தேசிய மின்சார உற்பத்தி கட்டமைப்பில், நீர்மின் உற்பத்தி 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மின்உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் 68 வீதம் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தள்ளார்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் 63.2 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 48.6 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தில் 80.9 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் 70.1 வீதமாகவும் , ரந்தனிக்கலை நீர்த்தேக்கத்தில் 86.6 வீதமாகவும் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வௌ்ளம் மற்றும் மண்சரிவால் சேதமடைந்த மின்விநியோக திட்டமிடல் கட்டமைப்பை திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலகுவில் சென்றடையக் கூடிய ஆபத்து நிலைமையற்ற அதி வலு மற்றும் குறைவலு கொண்ட மின்சார விநியோக கட்டமைப்புகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தடன் வௌ்ள அபாய எச்சரிக்கை விடுககப்பட்டுள்ள கொழும்பின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்விநியோகம் அல்லது அனர்த்தங்கள் தொடர்பில் 1901 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக மின்சக்தி அமைச்சுக்கு அறிவிக்க முடியும்என்பதுடன் 1987 என்ற துரித அழைப்பு இலக்கத்தினூடாகவும் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்க முடியும் அத்துடன் 011 30 30 30 3 என்ற இலக்கத்தினூடாகவும் இலங்கை மின்சார சபைக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: