50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – உணவுப் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராகவும் விசேட சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, July 7th, 2022

நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள போதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் வணிக கூட்டத்தாபனத்தின் மூலம் 50,000 மெற்றிக் தொன் அரிசியை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் வர்த்தக அமைச்சு தீர்மானம் தொடர்பாக சபையில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்..

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாடளாவிய ரீதியில் உள்ள 444 ச.தொ.ச விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக வணிக கூட்டத்தாபனத்தின் மூலம் 50,000 மெற்றிக் தொன் அரிசியை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் பெருமளவு அத்தியாவசிய பொருட்கள் நாட்டுக்கு கிடைக்க இருக்கின்றன.

உலக வங்கி மற்றும், உலக உணவுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றோம் இந்தியாவில் சீனி கோதுமை மா ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும்  சீனி மற்றும் கோதுமை மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தை சாத்தியமாக நிறைவடைந்துள்ளது.

இந்திய அரசாங்கம் 180 மில்லியன் அமெரிக்கன் டொலர் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதுடன் அந்த அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் நாட்டுக்கு கிடைக்கும். அத்தியாவசிய பொருட்களை பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் அரச மற்றும் தனியார் துறை இணைந்த வேலைத் திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவுப் பொருட்களையும் கேள்விக்கோரல் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கிணங்க முக்கியமான பதினைந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலையில் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்களை அதிகமாக சேகரித்து வைப்போர் மற்றும் பதுக்குவோர் தொடர்பில் விசேட சட்டங்களை கொண்டு வந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் சட்டமாஅதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது நாட்டரிசி ஒரு கிலோ 220 ரூபாவிற்கும்  சம்பா அரிசி ஒரு கிலோ 230 ரூபாவிற்கும் கீரிசம்பா ஒரு கிலோ 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஏனைய அத்தியாவசிய பொருட்களும் கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: