5 ஆண்டுகளாக வரிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்களுக்குத் தடை!

Tuesday, November 28th, 2017

5 ஆண்டுகளாக வாகனவரி அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்காத வாகனங்களுக்குத் தடை விதிப்பதற்கான புதிய நடைமுறை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரி ஜெகத் சந்திரசிறி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வாவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனவரி அனுமதிப்பத்திரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்காதுவிடின் தடை செய்யப்படும் நடைமுறை தற்போது பின்பற்றப்படுகின்றது. எனினும் தண்டம் அறவீடு செய்வதன் ஊடாக அவற்றுக்கு அனுமதி புதுப்பிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் புதிதாக வரும் நடைமுறைக்கு அமைவாக ஐந்து ஆண்டுகள் வரி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத வாகனங்களுக்கு அதனை ஒரு போதும் புதுப்பிக்கமுடியாது. அவ்வாறான வாகனங்களைப் பயன்படுத்த முடியாமல் தடைவிதிக்கப்படும்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மாகாண அலுவலகங்கள் மற்றும் மாகாணசபைகளிடமிருந்து கிடைத்த அறிக்கைகளின் பிரகாரம்  பல வாகனங்கள் 10 தொடக்கம் 15 ஆண்டுகளாக அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை தோல்வியடைந்தவர்களே இவ்வாறு அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்காது உள்ளனர்.

புதிய ஒழுங்குமுறை நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக தங்கள் வரி உரிமங்களைப் புதுப்பிக்காதவர்கள் உடனடியாக அதைச் செய்யவேண்டும். இல்லையெனில் வாகனத்துக்கான உரிமங்கள் இரத்துச் செய்யப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரி ஜெகத் சந்திரசிறி மேலும் கூறினார்.