44 விசாரணைகள் நிறைவு!

Thursday, June 9th, 2016

நிதி மோசடிகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் இதுவரையில் 44 விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.  அவை தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 6 ஆவணங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் நீதிமன்ற விசாரணைக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

எனினும் மோசடி குற்றச்சாட்டுக்கள் இருக்கும் அரச அதிகாரிகளை கைது செய்வதினால் அரச சேவையை ஸ்தம்பிதமடையச் செய்து கொள்ள முடியாது என்றும் பிரதம் இதன் போது   சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடம் நேரடி வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி.யான சுனில் ஹந்துனெத்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

பாரிய நிதி மோசடிகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நிதி மோசடிகள் பற்றிய குற்றப் புலனாய்வு பிரிவினால் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. இதன்போது பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் –

“இந்த விடயங்கள் ஆரம்பித்தபோது இதற்காக பயிற்றப்பட்ட அணியினர் இருக்கவில்லை. எனவே இதற்கான பயிற்சி வழங்க வேண்டியிருந்தது. அதன் நிமித்தம் வெளிநாடுகளுக்கும் அனுப்ப வேண்டியிருந்தது.தற்போது இரண்டாவது அணியினர் இலங்கையில் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் போது  வெளிநாடுகளுக்கு  செல்ல வேண்டியுள்ளது. இதற்கு சில நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க மறுக்ககின்றன. ஆகையால் அரசாங்கங்களினூடாக செல்ல வேண்டியுள்ளது.

நிதி மேசடிகள் பற்றிய குற்றப் புலனாய்வு பிரிவினரால் இதுவரை 44 விசாரணைகள் நிறைவு செய்ய அவை தொடர்பான ஆவணங்கள் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் 6  ஆவணங்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய ஆவணங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று நிதிமோசடி பற்றிய குற்றப் புலனாய்வு பிரிவினர் உரிய நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இதேவேளை, பாரிய நிதி மோசடிகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் ஜனாதிபதிக்கு கிடைக்கவில்லை. அந்த அறிக்கைகள் கிடைத்ததும் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.

எனினும் சுற்றுலா சபையைச் சேர்ந்த 6 அதிகாரிகளை  கைது செய்து வாக்குமூலம் பதிவு நீதிமன்றத்தில் ஆற்றுப்படுத்துமாறு கடந்த 18 ஆம் திகதி சட்டமா அதிபரின் திணைக்களத்தினால் நிதி மோசடி பற்றிய குற்றப் புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரிக்கு கடிதமொன்றின் மூலம் பணிக்கப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்றும் எதிர்க்கட்சி பிரதம  கொரடாவும் ஜே.வி.பி. எம்.பி. யுமான அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் –

இந்த விடயத்தில் 5 அரச அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.  அதில் ஒருவர் நிதி அமைச்சை சேர்ந்தவர்.   நாங்கள் அரச அதிகாரிகள் என்றும் வந்த உத்தரவுகளுக்கு அமையவே தாங்கள் செயற்பட்டதாகவும் விளக்கமளித்து அந்த அதிகாரிகள்  ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

அது மட்டுமல்லாது அரச அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் வெளியிட்டு  சில அதிகாரிகள் மகஜரில் கையொப்பமிடுகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய செயற்பட முடியும்   என்றும் கூறினார்.

எனினும் கைது செய்து வாக்கு மூலம் பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் உத்தரவிடப்பட்டதன் பின்னர் அவ்வாறு குற்றச்சாட்டப்பட்டவர்கள் ஜனாதிபதிக்கு மகஜர் கொடுத்துள்ளதற்காக அந்த சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க முடியுமா என்றும் இது அரசியல் தலையீடாகாதா? என்றும் அநுர குமார திஸாநாயக்க மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் –

இந்த நடவடிக்கைகளினால் அரச சேவையில் பிரச்சினை ஏற்படும் என்றும், அது தொடர்பாக ஆராய்ந்து உத்தரவொன்றை வழங்குமாறும் சட்டமா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.

எனினும் அரச சபைகளில் இருந்து விலகுவதென்று சில அதிகாரிகள் கையொப்பம் திரட்டி வருகின்றனர். அந்த வகையில் அரச சேவையையும் ஸ்தம்பிதமடையச் செய்து கொள்ள முடியாது. என்றாலும் அரச அதிகாரிகள் என்றாலும் கூட ஏதாவது செய்யுமாறு சட்டமா அதிபரின் உத்தரவும் வர முடியும்.

அத்தோடு பாரிய நிதி மோசடிகள் பற்றி விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஏதேனும் அறிக்கைகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அது பற்றி ஜனாதிபதியிடம் பேசி அவ்வாறான அறிக்கை காணப்படுமாயின் இந்த சபைக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Related posts: