400 கிராம் பால்மாவின் நிர்ணய விலை 295 ரூபா!
Friday, November 11th, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றுக்கு 295 ரூபா கட்டுபாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்களுக்கான 2 லட்சம் ரூபா காப்புறுதி திட்டத்தில் வெளிநோயாளர் மற்றும் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ செலவுகள் ஈடுசெய்யப்படும் என்றும் இதனூடாக வெளிப்புற சிகிச்சைகளுக்காக 10,000 ரூபாவும் உள்புற நோய் நிவாரணத்திற்காக ஒரு இலட்சம் ரூபா வரையிலும் காப்புறுதி வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர, அரச சார்பற்ற பல்கலைகழகங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ள அதேநேரம், அவற்றின் கல்வி மட்டத்தை பாதுகாப்பதற்கு திறன் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றையும் ஏற்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். அதேபோன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் 15,000 மாணவர்களுக்கு 8 லட்சம் ரூபா வரை கடன் உதவிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இதன்போது கல்வி நடவடிக்கைகளை இரவு 8 மணி வரை நீடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் உயர் பெறுபேறுகளைப் பெறும் தலா 3 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஹாவர்ட், கேம்பிரிஜ் மற்றும் எம்.ரி.ஐ. போன்ற உலக தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பிற்கான புலமைப் பரிசில் வழங்கப்படும் எனவும் நிதிமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
Related posts:
|
|