39 ஆக வீழ்ச்சியடைந்த கிளிநொச்சி மாவட்ட கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை – வடக்கிலும் பாரிய எண்ணிக்கை வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிப்பு!
Friday, September 17th, 2021கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 39 ஆக வீழ்ச்சியடைந்தது.
ஓகஸ்ட் மாத பிற்பகுதியில் 267 வரையில் உயர்வடைந்திருந்த மாவட்டத்தின் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை, படிப்படியாக வீழ்ச்சியடைந்து நேற்றையதினம் அது 39 ஆக பதிவுசெய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து அதனைக் கட்டுப்படுத்தவதற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர் மற்றும் ஊழியர்களும் கடுமையான முயற்சிகளை எடுத்து வந்தனர்.
மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையிலான மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் இதற்கு வேண்டிய முழு ஒத்துழைப்பையும் வழங்கி, தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிவாரணம் உள்ளிட்ட விடயங்களை உரிய முறையில் கையாண்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை உரிய நேரத்துக்குப் பெற்றுத்தந்ததுடன், அவரது இணைப்பாளர்கள் கொவிட் கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி சுகாதாரத் துரையினரை ஊக்கப்படுத்தினர்.
இந்த முயற்சிகளின் பயனாக செப்டெம்பர் மாத முற்பகுதியிலிருந்து படிப்படியாக வீழ்ச்சயடைந்துவந்த தொற்றாளர் எண்ணிக்கை நேற்றையதினம் 39ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் கொவிட் தொற்று நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளர் சரவணபவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தில் நேற்று தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளமை சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (16) மாகாணத்தில் 159 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்த நிலையில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 61 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 39 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 18 தொற்றாளர்களும் மன்னாரில் 5 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்து 953 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 649 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 711 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 366 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|